ஹைதராபாத்: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் "பதான்". இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஓம் சாந்தி ஓம், ஹேப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து பதான் படத்தில், தீபிகாவும், ஷாருக்கானும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் ஆகியோரின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில், ஷாருக்கானின் 57வது பிறந்தநாளையொட்டி இன்று(நவ.2) பதான் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி சண்டைக் காட்சிகளுடன் மிரட்டலாக இருக்கும் டீசர், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த டீசர் வெளியான ஒரு மணி நேரத்திலேயே யூடியூபில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். டீசரை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிகர்கள், ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் கூறுகின்றனர்.
பதான் திரைப்படத்தை தவிர, ஷாருக்கானின் மேலும் இரண்டு படங்கள் 2023ல் வெளியாகவுள்ளன. ராஜ்குமார் ஹிரானி இயக்கும் "டுங்கி" திரைப்படத்திலும், அட்லி இயக்கும் "ஜவான்" திரைப்படத்திலும் ஷாருக்கான் நடித்து வருகிறார். ஜவான் திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: ஷாருக்கான் பிறந்த நாள்... இல்லம் முன் குவிந்த ரசிகர்கள்