சென்னை: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான், டாப்ஸி பானு, விக்கி கௌசல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள டன்கி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து ஷாருக்கான் ரசிகர்கள் டன்கி படத்தை ஆர்ப்பரிப்புடனும், கொண்டாட்டத்துடனும் திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல சினிமா வர்த்தகர் சாக்னில்க் அறிக்கையின்படி, டன்கி முதல் நாளில் 25 முதல் 30 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் முதல் நாளில் கிட்டதட்ட 4,000 திரையரங்குகளில் வெளியாகும் டன்கி திரைப்படம், மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமீர்கானின் பிகே, ரன்பீர் கபூர் நடித்த சஞ்சு ஆகிய படங்களின் வசூல் சாதனையை டன்கி முறியடிக்கும் என கூறப்படுகிறது. டன்கி படத்தின் முன்பதிவு கடந்த சனிக்கிழமையன்று இரவு தொடங்கிய நிலையில், பிரபல திரையரங்க நிறுவனமான பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலீஸ் ஆகியவற்றில் 5,58,766 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது. முன்பதிவு மூலம் மட்டுமே 15.41 கோடி ரூபாய் டன்கி திரைப்படம் வசூல் செய்துள்ளது.
2 மணி நேரம் 41 நிமிடங்கள் ஓடக்கூடிய டன்கி திரைப்படத்திற்கு, தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் நாளை பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிக் பாஸ் தெலுங்கு டைட்டில் வின்னர் பல்லவி பிரசாந்த் கைது.. நடந்தது என்ன?