சென்னை:சந்திரா ஆர்ட்ஸ் - இ சக்கி துரை தயாரித்து, இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் சிறப்புக் காட்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.எஸ்.ஆர் பிரிவியூ (preview) தியேட்டரில் திரையிடப்பட்டது. இந்த சிறப்புக் காட்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பார்த்தனர்.
பின்னர், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய மூத்த தலைவர் நல்லகண்ணு,' “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தையை கேட்ட உடனே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. படம் எப்படி இருக்கிறதோ இல்லையோ என்பதை விட, இந்த தலைப்பில் படம் வந்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி. அதற்குக் காரணம், இந்தியாவில் தமிழுக்கு, சொல்லுக்கு கிடைத்த பெருமை. உலகத்தில் உள்ள பெருமை என்பது யாதும் ஊரே என்பது நம் தமிழ் இலக்கியத்தில், சங்க இலக்கியத்தில் முதல் வரியாக உள்ளது.
ஐக்கிய நாட்டு சபைகளின் முன்னால், யாதும் ஊரே என்ற பெயர்தான் உள்ளது. இது தமிழுக்கு உள்ள பெருமையையும், தமிழ் இலக்கியத்திற்கு உள்ள பெருமையையும் அடையாளம் காட்டப்பட்டு இருப்பதாகவும், அந்த மகிழ்ச்சியில் இந்த பெயரை கேட்டு படத்தை பார்க்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தேன்.
ஐக்கிய நாடுகளின் சபையில் யாதும் ஊரே என்பதுதான் தலைப்பு. அது தமிழுக்கு கிடைத்த பெருமை; அது அந்த சொல்லுக்கு கிடைத்த பெருமை; அந்தப் பெயரில் ஒரு படம் வந்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. மேலும், இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நன்றாக நடித்துள்ளார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சமூகமும் மாறி உள்ளது. இலங்கையில் உள்ள பிரச்சனைகளை தமிழகத்திலும் பேசுகிறார்கள். அதேபோல் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை வெளி உலகத்தில் பேசுகிறார்கள். இதனை இசையால் கருத்தால் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கிய படம் இது. அதை நான் பாராட்டுகிறேன்”என்று கூறினார்.