சென்னை:மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி.ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் ஜே.டி சக்கரவர்த்தியும், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் நடிக்கின்றனர்.
பாக்யராஜ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் 90களில் உருவான பெரும்பாலான திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. அதுபோன்ற கதையம்சம் கொண்ட திரைப்படமாக இது அமையும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இயக்குநர் செல்வராகவன் இப்படத்தின் கதை மிகவும் பிடித்து போனதால் நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யோகி பாபு, 'புஷ்பா' மற்றும் 'ஜெயிலர்' புகழ் சுனில், ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இன்னொரு நாயகியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜே டி சக்கரவர்த்தி படத்தை பற்றி பேசிய இயக்குநர் ரெங்கநாதன், "விறுவிறுப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை இந்த கதையில் புகுத்தி உள்ளோம். கதையைக் கேட்ட செல்வராகவன் மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். அவருக்கும், இப்படத்தை தயாரிக்கும் ஹரிகிருஷ்ணனுக்கும் மிக்க நன்றி" என்று கூறினார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகில் சுமார் 1000 துணை நடிகர்கள் பங்களிப்போடு நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.
சதீஷ் சூர்யா படத்தொகுப்பை கையாள்கிறார். கலை இயக்கத்திற்கு டி பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார். இயக்குநர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பான் இந்தியா அளவில் உருவாகி வரும் இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘அவளுடன் நானும் இறந்து விட்டேன்’ - விஜய் ஆண்டனி உருக்கமான பதிவு!