சென்னை: கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள 'சல்லியர்கள்' (Salliyargal) திரைப்பட அறிமுக விழா நேற்று (டிச.24) சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை நடிகர் கருணாஸ் வெளியிட்டார். மேலும், கென் கருணாஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நேற்று மறைந்த மறைந்த நடிகர் போண்டா மணி அவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் கௌதமன், பொன்ராம், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் கௌதமன் மேடையில் பேசியது, 'சல்லியர்கள் திரைப்பட படப்பிடிப்பு என்னிடம் இயக்குநர் கதை சொன்னார்கள். திரைப்படத்தில் என் மகன் தான் கதாநாயகனாக நடிக்க வேண்டியது சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது.
இத்திரைப்படத்தில் நடித்த பெண்ணின் நடிப்பு உறைய வைத்து விட்டது. என்ன பேசினாலும் இந்த படம் உங்களை உருக்கும். 15 ஆண்டுகளுக்கு முன்புலிருந்து மேதகு பிரபாகரனுடைய வாழ்க்கை வரலாறு பேசப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தீர்வு கொடுக்க அரசாங்கம் உள்பட அனைவருக்கும் அருகதை இல்லை. பல வகைகளில் பொய்கள் வீரப்பன் பற்றி வந்து கொண்டே இருக்கிறது. சந்தனக்காடு வந்தது போல உலகத்தை உலுக்கும், உலக மாந்தர்கள் தலை குனிய "வன்னிக்காடு" ஒருநாள் வரும். அதை செய்யாமல் நான் தலை சாயமாட்டேன்' என்று உணர்ச்சிப் பொங்க பேசினார்.
சல்லியர்கள் திரைப்பட அறிமுக விழா பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், 'சல்லியர்கள் திரைப்படம் அல்ல, ஒரு வரலாற்று ஆவணம். எங்களுக்கு வரலாறு இல்லை. ஆனால், வரலாற்று படைத்தவனுக்கு வரலாற்றை எழுத நேரம் இருக்காது. முன்னோர்கள் வரலாற்றைப் பார்த்தால் எதிரிகளால் வீழ்த்தப்பட்டது இல்லை. ஆனால், உடன்பிறந்த ரத்த சொந்தங்களால் வீழ்த்தப்பட்டனர். நமக்கு இலக்கிய சான்றுகள் தான் உள்ளது, வரலாற்று சான்றுகள் இல்லை.
பிரபாகரன் (Prabhakaran) பல நிகழ்வுகளை ஆவணப்படுத்தினார். பேனர்களில் பிரபாகரன் புகைப்படம் இருந்தால், அதை நேரலை செய்ய மாட்டார்கள். சுவரொட்டிகளில் புகைப்படம் இருந்தால், கிழித்து விடுவார்கள். பிரபாகரன் குறித்து படமெடுக்க தற்போது சரியான அரசியல் சூழல் இல்லை. தமிழர்கள் மனிதநேயர்கள் இல்லை, தமிழர்கள் உயிர்மெய் நேயர்கள் பகைவனாக இருந்தாலும், அன்பு காட்ட வேண்டும் என்பதைத்தான் திரைப்படம் கூறுகிறது.
உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் இந்த வரலாற்றுப் படைப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். தமிழ் படிக்க நார்வேயில் 17 பள்ளிக்கூடம் இருக்கிறது, டென்மார்க்கில் 30 பள்ளிக்கூடங்கள் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் வேலை கிடைக்காது. ஆனால், தாய்மொழியில் பேசினால், தண்டனை தரக்கூடிய பள்ளிக்கூடங்கள் இருக்கிறது. வரலாறு தான் எல்லா தேசிய இனங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'நடிகர் கருணாஸ் வரக்கூடிய காட்சிகள் படத்தில் இதயமாக இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த "சித்தா" (Chithha) படம் சிறப்பாக இருந்தது. மேலும், பார்க்கிங் திரைப்படமும் சிறப்பாக இருக்கிறது இருப்பினும் என் வீட்டை சுற்றி வெள்ளம் சூழ்ந்த நிலையில், அதையே ஒரு திரைப்படமாக எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் படம் பார்க்க முடியவில்லை என்று நகைச்சுவையாக பேசினார்.
இந்த நாட்டை நான்கு ஐந்து முறை ஆண்ட நிர்வாக தலைவர்கள் போல் எங்களுக்கும் ஐந்து ஆண்டு நிர்வாகம் செய்யக்கூடிய காலம் வந்திருந்தால் பிரபாகரன் தலைசிறந்த வல்லாதிக்க தமிழ் தேசிய நாட்டை கொண்டு சேர்த்திருப்பார். பிரபாகரன் தன் இனத்தின் விடுதலை குறித்து பெருங்கனவு வைத்திருந்தார். அது நிறைவேறவில்லை, அதற்காகத்தான் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குநரின் 'தி பாய்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!