சென்னை: தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ராக்கி, சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன்.
இரண்டு படங்களும் வித்தியாசமான மேக்கிங் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இதனால் அருண் மாதேஸ்வரன் தனுஷை வைத்து இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் தனுஷ், ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நாசர் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படம் 1930-40 காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஒரு சாதாரண மனிதன் எப்படி புரட்சியாளராக மாறுகிறான் என்பதே இப்படத்தின் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் ஆகியவை ரசிகர்களை மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கேப்டன் மில்லர் திரைப்படம் உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இப்படத்திலிருந்து 'கில்லர் மில்லர்' என்ற பாடல் வெளியானது. தற்போது 'உன் ஒளியிலே' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை கேபர் வாசுகி எழுதியுள்ளார். இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மற்றொரு படத்தில் தனுஷ் நடிப்பதாகச் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு சிலை.. பூச்சி முருகன் அளித்த தகவல்!