தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சார்பட்டா பரம்பரை-2க்கு போட்டியாக இணையத்தில் ட்ரெண்டான வட சென்னை-2 - இணையத்தில் ட்ரெண்டான வட சென்னை

சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகம் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்த நிலையில், அதற்கு போட்டியாக வட சென்னை-2 அப்டேட் கேட்டு தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Sarpatta
Sarpatta

By

Published : Mar 7, 2023, 8:36 PM IST

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான‌ திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் பசுபதி, துஷாரா விஜயன், ஷபீர், ஜான் விஜய், கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

சென்னையில் 1960களில் நடைபெற்று வந்த குத்துச்சண்டை போட்டியை அடிப்படையாக கொண்டு இப்படத்தை இயக்கியிருந்தார் பா.ரஞ்சித். குத்துச்சட்டை போட்டியில் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலையும், அது சார்ந்த அரசியலையும் இப்படம் பேசியிருந்தது.

இப்படத்தில் ஆர்யா மட்டுமல்லாமல், பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்டோரின் கதாப்பாத்திரங்களும் வலிமையாக வடிவமைக்கப்பட்டிருந்தன. குத்துச் சண்டையில் நடனத்தை ஒத்த அசைவுகளை வெளிப்படுத்திய டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் திடீரென இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்று பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அறிவித்தார். இதனை எதிர்பார்க்காத ரசிகர்களுக்கு இச்செய்தி இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து சார்பட்டா பரம்பரை-2 சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்தது.

இதனிடையே மற்றொரு செய்தி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. அது வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய செய்தி. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் வட சென்னை. இப்படத்தில் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளதாக அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல் பாகம் மட்டுமே வெளியானது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதில் குறிப்பாக ராஜனாக நடித்த அமீரின் நடிப்பும், அன்புவாக நடித்த தனுஷின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. இதனால் இரண்டாம் பாகமான அன்புவின் எழுச்சியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர். தற்போது சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வந்துள்ள நிலையில், வட சென்னை-2 குறித்த அறிவிப்பு எப்போது வரும்? என்று கேட்டு தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். வட சென்னை இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இப்படமும் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வட சென்னை இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு இப்போதைக்கு வெளியாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. வட சென்னை குறித்த அப்டேட் எப்போது வரும் என்ற ரசிகர்களின் கேள்விக்கு இயக்குநர் வெற்றிமாறன்தான் பதில் கூற வேண்டும்.

இதையும் படிங்க: Women's Day Special: தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள்!

ABOUT THE AUTHOR

...view details