தனியிசைப் பாடகர் அறிவு , தீ மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சேர்ந்து தயாரித்த ’எஞ்சாயி என்சாமி’ எனும் தனியிசைப் பாடல் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பாடகி தீ இந்தப்பாடலைப் பாடினார்.
ஆனால், இந்த விழாவில் அறிவு அவரோடு சேர்ந்துபாடவில்லை. இதனையடுத்து, பாடகர் அறிவு தனது இணைய பக்கத்தில், 'எஞ்சாயி என்சாமி' பாடல் முழுக்க முழுக்க தன்னுடைய உருவாக்கம் என்றும், யாரும் தனக்கு ட்யூனோ, இசையோ, தரவில்லை எனவும்; இது கூட்டு முயற்சி என்றாலும் அதன் உருவாக்கம் முழுக்க தன்னுடையது தான் என்றும், இறுதியில் உண்மை வெல்லும் என்றும், கூறிப்பதிவு ஒன்றை நேற்று(ஜூலை 31)செய்தார்.
இந்நிலையில், தற்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அதற்குப்பதிலளிக்கும் வகையில் கடிதம் ஒன்றை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், 'இந்தப் பாடலின் ஐடியாவை 2020ஆம் ஆண்டின் இறுதியில் முதலில் தீ தான் என்னிடம் சொன்னார். அதற்குப்பின்னர் நான், தீ மற்றும் அறிவு ஆகிய நாங்கள் இணைந்து கலையின் மீதுள்ள பெரும் காதலுடன் இந்தப் பாட்டைப் படைத்தோம். என்னுடன் சேர்ந்து தீ இசையமைக்க, அறிவு பாடல் வரிகள் எழுதினார்.
இயக்குநர் மணிகண்டன், அந்தப் பாட்டிற்கான பிரத்யேக வார்த்தைகளைத் தருவதற்கும், உண்மையில் நடந்த சம்பவங்கள் மற்றும் பண்பாட்டு வரலாறு ஆகியவற்றை அறிவுடன் பகிர்ந்து அவருக்கு வரிகள் எழுத உதவி செய்தார். இந்த 'எஞ்சாயி என்சாமி’ பாடலின் அடிப்படை தாக்கம் மணிகண்டன் இயக்கிய அற்புதமான திரைப்படமான ‘கடைசி விவசாயி’ எனும் படத்தில் தான் உருவானது.