சென்னை:தமிழ்திரையுலகின் முன்னணி இசையமைப்பாளஎராக திகழ்பவர் சந்தோஷ் நாராயணன். இவர் தனது பன்முகத்தன்மை கொண்ட இசை எல்லைகளைத் தாண்டி, இசை ஆர்வலர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளார். பெப்பியான பாடல்கள் முதல் தேன் சொட்டும் மெலடிகள் என இவரது பாடல்களின் வெற்றிப் பட்டியல் மிகப்பெரியது.
குறிப்பாக அவரது லைவ் நிகழ்ச்சி (Live Concert) குறித்த அறிவிப்பு செய்தியை அவரது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் தற்போது இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்திற்கு கொண்டாட்டம் தரும் வகையில், யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள முற்றவெளி மைதானத்தில் நேரலை இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
யுத்தத்தின் மூலமும், சமீபகாலமாக பொருளாதாரக் கொந்தளிப்பின் ஊடாக பயணப்படும் அங்குள்ள தமிழ் சமூகத்திற்கு தைரியத்தையும், உறுதியையும் வழங்க வேண்டும் என்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் நீண்டகால ஆசை இப்போது இந்த இசை நிகழ்ச்சி மூலம் நிறைவேற உள்ளதாக அவரது ரசிகர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதனை அடுத்து யாழ்ப்பாண மக்களுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்சிக்கு "சவுண்ட்ஸ் ஆஃப் தி சவுத்ஸ்" (Sound of the south) என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வரும் அனைத்து மக்களுக்கும் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இசை நிகழ்ச்சியில் பல்வேறு தெற்காசிய கலாச்சார பின்னணியில் இருந்து பல வித இசைகள், பல இசைக் கலைஞர்கள் இந்நிகழ்சியில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.