சென்னை:இயக்குனர் கார்த்திக் வர்மா இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் நடித்த படம் 'விரூபாக்ஷா' (Virupakasha). கடந்த மார்ச் 21-ல் வெளியாகிய இப்படத்தில் சாய் தரம் தேஜுக்கு சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் வெளியாகி 8 நாட்களே ஆன நிலையில், இப்படம் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத்தொடர்ந்து, இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஏப்.29) சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சாய் தரம் தேஜ், சம்யுக்தா, தனஞ்செயன், சக்திவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தமிழில் வெளியிடுகிறார். மே மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குனர் கார்த்தி, 'தமிழ் இயக்குனர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். என் படம் தமிழில் வெளியாவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஸ்டூடியோ கிரீனுக்கு நன்றி கூறினார். இப்படம் மிக சிறப்பான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் படமாக இருக்கும். தெலுங்கு மக்கள் ரஜினி, சூர்யா உள்ளிட்டோரின் படங்களை ரசிப்பார்கள். உங்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஹீரோ என்னிடம் காதல் படத்தை எதிர்பார்த்தார். ஆனால், நான் இந்த ஹாரர் படத்தை சொன்னதும் அவருக்கு பயமாக இருத்தது. நடிக்க முடியாது என்றார். பின்னர் இயக்குனர் சுகுமாரின் திரைக்கதையை பார்த்து ஒத்துக்கொண்டார். இது எந்த ஆங்கில படத்தின் தழுவல் கிடையாது' என்று தெரிவித்தார்.
இவரைத்தொடர்ந்து பேசிய படத்தின் கதாநாயகி சம்யுக்தா, 'தனக்கு தமிழில் 'வாத்தி' படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததாகவும், அதற்கு தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். விரூபாக்ஷா திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த அவர், தியேட்டரில் பார்க்கும் போது அந்த உணர்வு சிறப்பாக இருக்கும் என்றும் படம் பார்த்துவிட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஒரு விஷயத்தில் முதலில் நான் ஓகே சொல்லிக்கொண்டு பின்னர் நான் யோசிப்பேன் என்றும் பிறந்ததில் இருந்தே எனக்கு நம்பிக்கை அதிகம் என்றும் அவர் கூறினார்.