ஹைதராபாத்: ஹாலிவுட்டின் பெரும் படைப்பான ‘அவெஞ்சர்ஸ்’ படத்தை இயக்கிய ரூஸ்ஸோ சகோதரர்களும், பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அமைத்த ஓர் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ராஜமௌலி, ஆர்ஆர்ஆர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட இந்தியத் திரைப்படமாக , 47 மில்லியன் மணி நேரங்கள் பார்க்கப்பட்டது மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் உள்ளதாகக் கூறினார்.
மேலும், “என் படத்தை மேற்கத்திய ரசிகர்கள் ஏற்றுக்கொண்டது எதிர்பார்த்திராத சந்தோஷமாகவே இருந்தது. எல்லோரும் நல்ல கதையை ரசிப்பார்கள். ஆனால், என்னால் எல்லோருக்கும் பிடித்த முறையில் படம் எடுக்க முடியுமென நான் எதிர்பார்த்ததில்லை” எனப் பேசினார்.
அதில் பேசிய ஜோ ருஸ்ஸோ, “ஆக்ஷன் ஒரு உலகளாவிய மொழி. கதைக்களத்தின் சுற்றுச்சூழலும் அமைப்புகளும் சீராக இருந்தால் போதும், வார்த்தையின்றி நாம் கதையை கடத்திவிட முடியும். இதனால் தான் இந்த ஜானர் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடிகிறது” எனப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் ரூஸ்ஸோ சகோதரர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “ ’தி கிரேட்’ ராஜமௌலியை சந்தித்தது மிகப் பெருமையாக உள்ளது” எனப் பதிவிட்டனர். அதற்குப் பதிலளித்த ராஜமௌலி, “பெருமையும், பெரும் சந்தோஷமும் எனக்கே. இன்னும் உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
ரூஸ்ஸோ சகோதரர்கள் இயக்கத்தில் நடிகர் தனுஷ் உட்பட பல ஹாலிவுட் நடிகர்கள் நடித்த ‘தி கிரே மேன்’ திரைப்படமும் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள்... விஜய் படம் குறித்து லோகேஷ் கனகராஜ்...