இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி மாதவன் எடுத்திருக்கும் படம் 'ராக்கெட்ரி'. இதில் மாதவனின் மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார். இவர்களுடன் ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் சூர்யா சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று(ஜூன் 22) சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் மாதவன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய நடிகர் மாதவன், ''நம்பி நாராயணனை சந்திக்கும் முன் இருந்த மாதவனும் அவரை சந்தித்த பின்னர் இருக்கும் மாதவனும் வேறு. நிறைய வித்தியாசம் உள்ளது. இந்த ஸ்கிரிப்ட் செய்ய 7 மாதம் ஆனது. நம் நாட்டில் தேச பக்தர்கள் இரண்டு விதமாக உள்ளனர். தினமும் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து, அவர் செய்த சாதனைகளை வெளியில் தெரியாமல் இருப்பவர்கள் ஒரு ரகம்.
நம்பி நாராயணன் தமிழர் என்பது தமிழர்களுக்கே தெரியவில்லை. அதன் காரணமாக தான் இந்தப் படம் எடுக்க நினைத்தேன். விகாஸ் இன்ஜினை கண்டுபிடித்ததால் தான், இவருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்தது. இந்த விகாஸ் இன்ஜின் இதுவரை ஃபெயில் ஆனது இல்லை. ராக்கெட் விஞ்ஞானி பற்றி ஒரு படத்தை விஷுவலாக காட்டுவது கடினம்.