சென்னை: 'பாட்னர்' படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ரோபோ சங்கர், நடிகை ஹன்சிகாவை இழிவாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் இவ்வாறு பேசியதற்கு ஜான் விஜய் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இயக்குநர் சற்குணத்தின் உதவி இயக்குநர் மனோஜ் இயக்குநராக அறிமுகமாகி, ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள 'பாட்னர்' (Partner) படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜூலை 1) சென்னை வடபழனியில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆதி, ஹன்சிகா, முனீஸ்காந்த், பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
'பாட்னர்' என்ஜாய்மெண்ட் படம்:இந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ஆதி, 'முதலில் கதையை போனில் தான் சொன்னதாகவும், போனில் கதையைக் கேட்டதும் ஆர்வமாக இருந்ததாகவும் கூறினார். இந்த பாட்னர் படத்தை கண்டிப்பாக என்ஜாய் பண்ணலாம் என்றும் ரொம்ப யோசித்தால், உங்களுக்கான படம் இதில்லை என நினைப்பதாகவும் கூறினார்.
கட்டை விரலையாவது தடவிக் கொள்கிறேன்: இவரைத்தொடர்ந்து பேசிய ரோபோ சங்கர், 'ஹன்சிகா ஒரு மெழுகு பொம்மை என்றும் மைதா மாவை உருட்டி சுவற்றில் எறிந்தால் ஒட்டிக்கொள்வதைப் போல தான் அவரும் என்று புகழ்ந்தார். மேலும் பேசிய அவர், இந்தப் படத்தின் ஒரு காட்சியில் ஹன்சிகாவின் முட்டிங்காலிற்கு கீழே ஒரு பொருளைத் தேடி நான் தடவ வேண்டும் என்ற ஷாட் வந்ததாகவும், இதற்காக அவரிடம் எவ்வளவோ போராடி கேட்டதற்கு ஹன்சிகா முடியாது என மறுத்துவிட்டதாக கூறினார். வேண்டுமெனில், கட்டை விரலையாவது தடவிக் கொள்கிறேன் என்றும் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் கூறிய ரோபோ சங்கர், 'ஹீரோ ஆதி மட்டும் தான் தொட வேண்டும், மற்றவர்கள் கூடாது என்று ஹன்சிகா கூறிவிட்டார். அப்போது தான் நினைத்தேன். ஹீரோ ஹீரோ தான். காமெடியன் ஓரமாகத்தான் இருக்க வேண்டும்' என்பது என்றும் தெரிவித்தார். அதன்பிறகு விமானத்திற்கு நேரமானதால் ரோபோ சங்கர் அங்கிருந்து சென்றுவிட்டார்.