தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அஜித் பிறந்தநாளன்று டிஜிட்டலில் மீண்டும் வெளியாகும் "அமராவதி"! - தமிழ் சினிமா

அஜித் பிறந்தநாளன்று அவருக்கு பரிசளிக்கும் வகையில் அவர் நடித்து ஹிட் அடித்த முதல் படமான "அமராவதி" படத்தை டிஜிட்டலில் மீண்டும் வெளியடத் திட்டமிட்டுள்ளார், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம்.

டிஜிட்டலில் அமராவதி
டிஜிட்டலில் அமராவதி

By

Published : Mar 28, 2023, 4:07 PM IST

சென்னை:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர், நடிகர் அஜித் குமார். ஆரம்ப காலங்களில் காதல் படங்களில் நடித்து பிரபலமானவர். சரண் இயக்கத்தில் இவர் நடித்த காதல் மன்னன் திரைப்படமே இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்களை உருவாக்கினாலும் இவர் நடித்த முதல் படமான ''அமராவதி'' அவருடைய திரை வாழ்வில் சிறப்பிக்கும் மற்றும் குறிப்பிடும்படியான படமாகவும் அமைந்தது.‌

சோழா கிரியேஷன்ஸ் சார்பில், 1993-ம் ஆண்டு சோழா பொன்னுரங்கம் தயாரித்து, வெளியான படம் "அமராவதி". அஜித் அரும்பு மீசையுடன் நடித்த இந்த காதல் காவியத்தில், ஜோடியாக சங்கவி நடித்திருந்தார். இப்படம் செல்வா இயக்கத்தில் வெளியானது. அமராவதி படத்தின் மூலம் அஜித் குமாரை கதாநாயகனாக திரையுலகிற்கு சோழா பொன்னுரங்கம் அறிமுகப்படுத்தி, 30 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

இதன்பிறகு தனது கடின உழைப்பால் பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து, தற்போது கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மிகப்பெரிய நடிகராக வலம் வருகிறார், அஜித் குமார். அஜித்தின் இந்த வளர்ச்சிக்கு அமராவதி திரைப்படமும் ஒரு காரணமாண நிலையில், அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, அஜித் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி,அவரின் பிறந்தநாளான வருகின்ற மே மாதம் முதல் தேதியில், அவரின் முதல் படமான "அமராவதி" படத்தை டிஜிட்டலில் வெளியிடுகிறோம் என்று தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரசாத் ஸ்டுடியோவில், இரவு பகலாக நவீன தொழில்நுட்பத்துடன் அமராவதி டிஜிட்டல் வடிவமாக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போதைய இசை வடிவில், புதிய பின்னணி இசையும் அமைக்கப்பட்டு வருகின்றது. பாலபாரதியின் இசையில் அமராவதி படத்தின் பாடல்கள் இப்போதுவரை எல்லோருடைய விருப்பப் பட்டியலில் உள்ளது. இந்தப் படத்தில் வைரமுத்து வரிகளில் வெளியான புத்தம்‌புது மலரே, தாஜ்மகால் தேவையில்லை, உடல் என்ன உயிரென்ன ஆகிய பாடல்கள் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. இப்படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கியப் பங்காற்றின என்றால் மிகையாகாது.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடும் விதமாகவும், மே முதல் தேதி, 'பிறந்தநாள் பரிசாக'வும் அமராவதி படம் திரைக்கு வருகிறது என்கிறார், அப்படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம். இந்த செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடிகர் அஜித்தின் தந்தை‌ பி.எஸ்.மணி காலமானார்.

அப்போது அமராவதி படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் அந்த நிகழ்வுக்கு வந்திருந்த நிலையில் தந்தையின் உடலுடன் காரில் ஏறிய அஜித், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் நிற்பதைப் பார்த்து காரில் இருந்து இறங்கி அவரை கட்டிப்பிடித்தார். தனது முதல் படத் தயாரிப்பாளர் மீது அஜித் எந்த அளவுக்கு மரியாதை வைத்துள்ளார் என்பதற்கு சாட்சியாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜான்வி கபூரின் பிளாக் & ஒயிட் ஹாட் பிக்ஸ்

ABOUT THE AUTHOR

...view details