சென்னை: அர்ஜூன் ரெட்டி படத்திற்குப் பின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'அனிமல்'. இப்படத்தை டி சீரியல் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல், பிரனீதி சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலிவுட்டில் சாக்லேட் பாயாக வலம் வந்த ரன்பீர் இந்த படத்திற்காக ரக்கர்ட் தோற்றத்தில் நடித்துள்ளது படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படம் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகிறது. இதனை ஒட்டி இன்று (நவ. 26) சென்னையில் இப்படத்தை விளம்பரபடுத்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய ரன்பீர் கபூர், "ஜெயிலர், லியோ, விக்ரம் போன்ற 3 மிகப்பெரிய தமிழ் திரைப்படங்களை இந்தியாவின் டாப் திரைப்படங்களின் வரிசையில் கொடுத்ததற்கு நன்றி. அனிமல் தமிழ் டப்பிங், தமிழ் ரசிகர்களுக்காக இயக்குநர் சந்தீப் உள்ளிட்ட படக்குழுவினர் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர்.
டிசம்பர் 1ம் தேதி அனிமல் வெளியாகிறது, மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த படம் பண்ணும்போது நானும் அப்பா ஆனேன். படத்தில் உள்ள கேரக்டருக்கும் நிஜ வாழ்க்கையிலும் சற்று விசித்திரமாக இருந்தது. ஆனால் என்னால் ரீல் மற்றும் நிஜ வாழ்க்கையை வேறுபடுத்தி பார்க்க முடிந்தது" என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, அனிமல் படம் தென்னிந்திய படங்கள் போன்று ராவாக உள்ளதே என்ற கேள்விக்கு, இது இயக்குநர் இடம் இருந்து வந்தது. நான் பார்த்த இயக்குநர்களிலேயே உண்மையான படம் எடுப்பவர் சந்தீப். வழக்கமாக நாம் நடிக்கும் போது இது எந்த காட்சிக்கும் மற்ற படங்களின் ரெப்பரென்ஸ் இருக்காது எல்லாமே ஒரிஜினலாக இருக்கும்.