ஐதராபாத்:அர்ஜூன் ரெட்டி படத்திற்குப் பின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் உருவாகி வரும் படம் 'அனிமல்'. இப்படத்தை டி சீரியல் மற்றும் சினீ 1 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அனில் கபூர், பாபி தியோல், பிரனீதி சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக 'அனிமல்' படத்தின் ரன்பீர் கபூரின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ரன்பீர் கபூர் இந்த படத்தில் புதிய கெட்-டப்பில் களமிறங்கியுள்ளார். பாலிவுட்டின் சாக்லேட் பாயாக வலம் வந்த ரன்பீர் இந்த படத்திற்காக ரக்கர்ட் தோற்றத்தில் நடித்துள்ளது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ரன்பீர் கபூரின் பிறந்த நாளான இன்று (செப் 28) படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் ரன்பீரின் தோற்றம் மட்டும் மாறுபட்ட நடிப்பால், இப்படம் ரன்பீர் கபூருக்குத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாக்ஸிக் அப்பா-பையன் உறவைப் பற்றி பேசும் படமாக இருப்பது போல இந்த டீசர் அமைந்துள்ளது.