சென்னை: இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மூலம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். இவரது படங்களில் டார்க் காமெடி மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. இதனால், விஜய்யை வைத்து 'பீஸ்ட்' என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார், நெல்சன். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும், பீஸ்ட் திரைப்படம் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளானது. பீஸ்ட் திரைப்படம் விமர்சனத்துக்கு உள்ளான பட்சத்திலும் நெல்சனுக்கு மீண்டும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தை (Rajinikanth) வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. நெல்சன் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கியுள்ளார்.
’தியேட்டரில் சந்திப்போம்’... ஜெயிலர் படப்பிடிப்பை முடித்து படக்குழு ட்வீட்!! சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இப்படத்தை தயாரித்துள்ளார். ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள 'ஜெயிலர்' (Jailer) படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அதிக பொருட்செலவில் தயாராகும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, நெய்வேலி, ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மாபெரும் பொருட்செலவில் நடைபெற்று வந்தது. ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் 'முத்துவேல் பாண்டியன்' என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார்.
இதையும் படிங்க: காதலியுடனான உறவை மறுக்கும் காட்பாதர் நடிகர்... இது என்ன புது பிரச்சினை!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், இந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் நடிகர்கள் ரஜினிகாந்த், தமன்னா, நெல்சன் ஆகியோர் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுடன் கேக் வெட்டும் புகைப்படங்கள் வெளியிட்டு படக்குழு இன்று (ஜூன் 1) அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி படப்பிடிப்பு நிறைவுவடைந்து விட்டது; திரையரங்குகளில் சந்திப்போம் என்று டிவிட்டரில் பதிவிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், ரஜினிகாந்த் வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதேபோல், நெல்சனும் கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் நிலையில் இந்த இருவரது கூட்டணி எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எப்படியாவது இந்த படத்தை வெற்றிப் படமாக கொடுத்து விட வேண்டும் என்று ரஜினியும் நெல்சனும் பார்த்து பார்த்து இப்படத்தை உருவாக்கி வந்தனர். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்து அப்டேட்கள் இனி வரும் நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க: பிரபுதேவா நடிப்பில் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் 'பேட்ட ராப்'