சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே ஜெயிலர் படத்தில் காவாலா, ஹுகும், ரத்தமாரே உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஹுகும் பாடல் வரிகள் சமூக வலைதளங்களில் ரஜினி - விஜய் ரசிகர்களிடையே யார் சூப்பர் ஸ்டார் என்ற விவாதத்தை உருவாக்கியது. மேலும் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினி கூறிய காக்கா - பருந்து கதை, நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசுவது போல் இருந்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஜினி ரசிகர்கள் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டினர். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியானது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி இன்று காலை திரையிடப்பட்டது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி இன்று அதிகாலை திரையிடப்பட்டது.
சென்னையில் பிரபலமான ரோகிணி திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஜெயிலர் படத்தை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் வெற்றி தியேட்டரில் ஜெயிலர் படம் பார்த்தார்.