சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பாக, நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர் இமயமலைக்கு ஆன்மிக பயணத்திற்கு சென்றார். நடிகர் ரஜினிகாந்த் 2010 வரை அவரது படங்கள் வெளியாவதற்கு முன்பாக இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். கடந்த 4 ஆண்டுகளாக கரோனா, உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களுக்காக இமயமலைக்கு பயணம் செல்வதை தவிர்த்து வந்தார்.
கடைசியாக 2018ஆம் ஆண்டு காலா படம் வெளியாவதற்கு முன்பாக இமயமலைக்கு சென்று இருந்தார். பின்னர் கரோனா காரணத்தால் 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இமயமலைக்கு சென்றுள்ளார். ஜெயிலர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூலைப் பெற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இமயமலையில் இருந்து திரும்பி தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர், பத்ரிநாத், ஜார்கண்ட், உத்தர பிரதேசம் என தொடர்ந்து பயணம் மேற்கொண்டார். இதற்கிடையில் ரஜினிகாந்த் இல்லாமலேயே ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடினர். ஜார்கண்ட் பயணத்தின் போது அங்குள்ள சின்னமாஸ்தா கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த், தொடர்ந்து யசோதா ஆசிரமம் சென்று அங்கு தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.
பின்னர் ரஜினிகாந்த் உத்தர பிரதேசம் சென்று யோகி ஆதித்யநாத் உடன் ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து லக்னோ சென்ற ரஜினிகாந்த் உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா உடன் ஜெயிலர் படம் பார்த்தார். பின்னர் யோகி ஆதித்யநாத் இல்லத்திற்கு மனைவி லதா உடன் சென்ற ரஜினிகாந்த், தன்னைவிட 21 வயது குறைந்தவரான யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கினார்.
ரஜினிகாந்த்தின் இந்த செயல் சமூக வலைதளங்களிலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தன்னுடைய ஆன்மிக பயணத்தை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது அவரை சென்னை விமான நிலையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு ஆரவாரத்துடன் வரவேற்றனர்.