சென்னை:நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகளவில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்கள் மூலம் தமிழில் வெற்றி இயக்குநராக வலம் வருகிறார் நெல்சன் . இவரது படங்களில் இருக்கும் டார்க் காமெடிகள் மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும்.
விஜய் நடித்த பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். மேலும் தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், மோகன் லால், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அதிக பொருட்செலவில் தயாராகும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, நெய்வேலி, ஹைதராபாத், கொச்சின் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மாபெரும் பொருட்செலவில் நடைபெற்று முடிந்துள்ளது.ஆக்சன் கலந்த படமாக உருவாகும் இந்த ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் 'முத்துவேல் பாண்டியன்' என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அடுத்த மாதம் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்து தான் எப்போதும் குதிரை தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினி உள்ளார். பீஸ்ட் படம் சொதப்பியதால் ஜெயிலர் படத்தை ஹிட்டாக்கிவிட வேண்டிய நிர்பந்தத்தில் நெல்சன் உள்ளார்.
இந்த நிலையில் இன்று ஜெயிலர் படத்தில் இருந்து காவாலா என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது. 'காவாலா' பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஷில்பா ராவ் பாடியுள்ளார். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்த பாடலில் தமன்னா பயங்கரமான குத்தாட்டம் போட்டுள்ளார். வழக்கமான ரஜினியின் ஸ்டைல் இப்பாடலில் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். பாட்டு காவாலா, டான்ஸ் காவாலா ரெண்டும் காவாலா என பாடல் வரிகள் ரகளையாக உள்ளது. 100க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் இப்பாடலில் நடனம் ஆடியுள்ளனர். வித்தியாசமான அரங்கம் அமைக்கப்பட்டு இந்த பாடல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனிருத்தின் டிரேட் மார்க் இசை இந்த பாடலிலும் வெளிப்பட்டு உள்ளது. பாடல் இனிவரும் நாட்களில் இன்ஸ்டாகிராம், யூடியூப் என அனைத்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் ஆக வலம்வரப் போவது உறுதி. ஆகஸ்ட் 10 ம் தேதி திரையரங்குகளில் திருவிழா உறுதி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.