சென்னை:தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை தங்களுக்கு ஒரு நடிகரையோ நடிகையையோ பிடித்துவிட்டால் அவர்களை தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசாகும் நேரத்தில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்துவது, பிடித்த நடிகர்களுக்கு உடல்நலம் சரியில்லாத நேரத்தில் அவர்களுக்காக வேண்டிக் கொண்டு கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
சமீப காலங்களில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை கடவுளுக்கு இணையாக பாவிக்கின்றனர். அதில் ஒருபடி மேலே சென்று தனக்கு பிடித்த நடிகர், நடிகைகளுக்கு கோயில் கட்டியும் தங்களது அன்பை வெளிப்படுத்துகிறார்கள். இது இப்போது ஒரு வாடிக்கையாகிவிட்டது. ரசிகர்கள் குஷ்பூ, நயன்தாரா, சமந்தா, நிதி அகர்வால் என தங்களுக்கு பிடித்த நடிகைகளுக்கு கோயில் கட்டி வழிபடுகின்றனர். ஆனால் இது எல்லாவற்றிற்கும் மேலாக மலேசியாவில் நடந்துள்ள ஆச்சரியத்தை கேட்டால் வியந்து போவீர்கள்.
மலேசியா கோலாலம்பூர் மாகாணத்தில் கங்கை வே ஸ்ரீ சக்தி ஈஸ்வரி ஆலயம் ஒன்று உள்ளது. பழமை வாய்ந்த அந்த கோயிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில் அந்த கோயிலின் ராஜ கோபுரத்தில் இருக்கும் சிலைகள் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஏனென்றால் அந்த சிலைகளை பார்க்கும் போது நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், நயன்தாரா சாயலில் உள்ளன.