நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வருகின்ற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், மோகன்லால், விநாயகம் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜெயிலர் படத்தின் புரொமோஷன் தொடங்கியது முதல் பேசுபொருளாக இருந்து வருகிறது. முதலில் 'காவாலா' என்ற பாடல் வெளியானது.
இப்பாடல் ட்ரெண்டாகி சமூக வலைதளங்களில் தமன்னா ஸ்டைல் நடனத்தை ரீல்ஸ் செய்யாத இளசுகளே இல்லை எனக் கூறலாம். பின்னர் வெளியான ஹுகும் பாடல் ரஜினி, விஜய் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் சண்டையை கிளப்பியது. ‘உங்கப்பன் விசில கேட்டவன்’, ‘பட்டத்த பறிக்க நூறு பேரு’ உள்ளிட்ட பாடல் வரிகளால் ரசிகர்கள் மோதிக் கொண்டனர். மேலும் ஜெயிலர் ஆடியோ வெளியிட்டு விழாவில் ரஜினி கழுகையும், பருந்தையும் ஒப்பிட்டு சொன்ன கதை நடிகர் விஜய்யை தாக்கி பேசுவது போல் இருந்தது என விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர்.