சென்னை: பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், சந்திரமுகி. இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில், இதன் இரண்டாம் பாகமாக லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28-ஆம் தேதி 'சந்திரமுகி 2' வெளியானது.
இந்நிலையில், இந்தத் திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். இதனையடுத்து, அவர் படத்தின் இயக்குநர் பி.வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தை பார்த்த ரஜினிகாந்த், “மிகப்பெரிய வெற்றி படமான தன்னுடைய சந்திரமுகியை.. புதிதாக, வேறு ஒரு கோணத்தில், ஒரு பிரமாண்ட பொழுதுபோக்குப் படமாக, சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர் வாசு-க்கும்.. அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ்-க்கும் மற்றும் படகுழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்” என வாழ்த்தியுள்ளார்.
இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்து இருக்கிறார்கள். இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் தயாராகி உலகம் முழுவதும் 450-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'சந்திரமுகி 2' வெளியாகியுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், ராதிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்வில் வெளியேற்றப்பட்ட நடிகர் சித்தார்த் - மன்னிப்பு கோரிய கன்னட நடிகர்கள்!