மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், 'வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என சிவாஜி விரும்பினார்' எனப் பேசியுள்ளார்.
இவ்விழாவில் பேசிய கமல் ஹாசன், ”எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. என்னுடைய மணிரத்னம் கதை பற்றி சொல்ல நிறைய உள்ளது. இதை எம்.ஜி.ஆர் வாங்கி வைத்திருந்தார். அவர் சீக்கிரம் எடுத்துவிடு என்று சொன்னார் அப்போது புரியவில்லை. ஆனால், அந்த எண்ணம் அனைவருக்கும் வந்து விட்டது. நான் முயற்சி செய்தேன். ஆனால், என்னால் எடுக்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது.
மணிரத்னம் வெற்றி பட்டியலில் முக்கிய படமாக இது இருக்கும். மேடை அலங்காரத்திற்காக நான் இதை சொல்லவில்லை. ஷோலே மாதிரி ஒரு படம் எடுக்க முடியுமா என்று நினைத்து இருக்கோம். அது மாதிரி தான் இந்த படம். இது ஒரு சிறிய குடும்பம். இதில் பொறாமை பட நேரமில்லை. அதை இளம் வயதில் புரிந்து கொண்டவர் நானும் ரஜினியும்.