சென்னை:அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘ரெய்டு’. இப்படத்திற்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். அந்த வகையில், தீபாவளியை ஒட்டி வருகிற 10ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, இன்று (நவ.03) சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, செல்வா, இயக்குநர் முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வேலு பிரபாகரன் பேசும்போது, “இது ஒரு அற்புதமான வாய்ப்பு. விக்ரம் பிரபுவுடன் நடித்தது என்ன சொல்வது என்று தெரியவில்லை.
இவரது அப்பா பிரபு, என்னுடைய படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். ஒரு கலைஞனுக்கு மிகப் பெரிய பொறுப்பு உண்டு. சமூக தவறுகளை சுட்டிக்காட்டும் பல வேலைகளை கலைஞன் செய்ய வேண்டும். கலைஞர்கள் சாதி, ஏற்றத்தாழ்வுக்கு எதிராக போராட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து நடிகர் செல்வா பேசும்போது, “எனது அப்பா போலீசாக இருந்து ஓய்வுபெற்றவர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலமானார். அவரது நினைவாக, எனது ஒவ்வொரு படத்திலும் வாங்கும் சம்பளத்தில் இருந்து 20 சதவீதத்தை, காவல் துறையினரின் குடும்பத்தின் நலனுக்காக செலவிடுவேன்” என்று தெரிவித்தார்.
இயக்குநர் முத்தையா பேசுகையில், “இதுவரை 8 படங்கள் பண்ணி விட்டேன். அனைத்தும் மண் சார்ந்த படங்கள். அடுத்த படமும் அப்படி தான் இருக்கப்போகிறது. தெலுங்கு படமான ‘டகரு’ படத்தை பார்த்து விட்டு, அதன் உரிமையை வாங்கலாம் என்று யோசித்தேன். நகரத்தின் பின்னணியில் ஒரு படம் பண்ணலாம் என்று இதன் உரிமையை வாங்கினேன்.