சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் நடித்து கடந்த 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda DoubleX). இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி இன்று (நவ.17) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், “இது ரொம்ப சந்தோஷமான மேடை எனக்கு. என்னை வைத்து நான் எடுத்த காஞ்சனா படம், ரூ.130 கோடி வசூல் செய்வது என்பது வேறு. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பண்ண வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டே இருந்தேன்.
அவர் என்னை மாற்றி விட்டார். இதுவரை இருந்த லாரன்ஸ் வேறு. ஜிகர்தண்டா படத்தில் இருக்கும் லாரன்ஸ் வேறு. க்ளைமாக்ஸ் காட்சிக்கு அவருக்கு ( இயக்குநர்) இருந்த நம்பிக்கை தான். அவரது கதை சுயம்பு. இந்த படம் பார்த்து விட்டு, ஏழைகளின் கதையைப் பற்றி எப்படி படமாக எடுத்தார்கள் என்று என் அம்மா என்னிடம் கேட்டார். ஆன்மீகத்தை அவர் நம்புவதால் அது அவருக்கு அழகான வெற்றியை கொடுத்துள்ளது.
என்னடா இது இப்படி இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் படம் ரிலீஸ்க்கு பிறகு, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் காலாட்டி கொண்டு உட்காரலாம்” என்று ஜாலியாக பேசினார். தொடர்ந்து, “இந்த படத்தில் என் வாழ்க்கையை மாற்றிக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் குடும்பத்தில் நானும் ஒருவன் தான். இந்த டிராவலை மிஸ் பண்ணக் கூடாது என்று தோன்றுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சத்தானியாக நடித்த வித்துவை ரொம்ப பாராட்டினார். சூப்பர் ஸ்டார் ஆசிர்வாதமே அவருக்கு கிடைத்து விட்டது. ரிலீஸுக்கு முன்பே அனிருத், தனுஷ் எல்லோரும் டுவீட் மூலம் பாராட்டினார்கள். அடுத்ததாக இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பாராட்டினார்கள்.
ரஜினி, ‘என்னப்பா கண்ணா.. பயங்கரமா நடிக்கிறியே’ என்று ரொம்ப புகழ்ந்தார். நான் எதிரே பார்க்கும் ராகவேந்திரா சுவாமியாக என் குருநாதர் ரஜினிகாந்தை பார்க்கிறேன். எஸ்.ஜே.சூர்யா இருக்கும் படத்தில் ராகவா லாரன்ஸ் நன்றாக நடித்துள்ளார் என்றால், அதற்கு நீங்கள் தான் காரணம்.
என் ரசிகர்கள் வர வேண்டாம். நான் உங்களை பார்க்கிறேன் என்று ரசிகர்களிடம் சொல்லியிருக்கிறேன். அதை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். ஒவ்வொரு படத்தின் போதும் எதாவது நல்லது செய்வது என் வழக்கம். என் ரசிகர்களுக்காக என் அம்மா பெயரில் (கண்மணி கல்யாண மண்டபம்) திருமண மண்டபம் கட்டப் போகிறேன். அங்கு என் ரசிகர்கள் இலவசமாக திருமணம் செய்யலாம். பெருமையாக சொல்லிக் கொள்ளும்படி அது இருக்கும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:தமிழகத்தில் அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள்! இன்று வெளியாகிய படங்கள் என்னென்ன?