தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"வெளிப்புறப் படப்பிடிப்பில் போலீசார் லஞ்சம் கேட்கிறாங்க" - தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றச்சாட்டு! - ஒரே இரவில் நடக்கும் லேடீஸ் ஹாஸ்டல் கதை

RaRa SaraSukku RaRa Movie Pre Release event: ஒரே இரவில் நடக்கும் லேடீஸ் ஹாஸ்டல் கதையாக உருவாகியுள்ள 'ரா ..ரா ..சரசுக்கு ராரா' திரைப்படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது.

RaRa SaraSukku RaRa Movie Pre Release event
'ரா ..ரா ..சரசுக்கு ராரா' திரைப்படத்தின் முன்னோட்ட விழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 1:37 PM IST

சென்னை:ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ரா.. ரா.. சரசுக்கு ராரா...' இந்த படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ள இப்பத்திற்கு ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ் மற்றும் ஜி.கே.வி இசையமைத்துள்ளார். மேலும் 9V ஸ்டுடியோஸ் நிறுவனம் நவம்பர் 3 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது. முன்னதாக இப்படத்தின் முன்னோட்ட விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

படத்தின் இயக்குநர் கேசவ் தபுர் பேசும்போது, "படத்தில் 60 கட்கள் சென்சாரில் கொடுத்தார்கள். அதனால் என்னை "60 கட் டைரக்டர் " என்று கூறுகிறார்கள். நான் இதுவரை வந்த படங்களைப் பார்த்து தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். எத்தனையோ படங்களில் அனுமதித்த காட்சிகளை எல்லாம் எங்களுக்கு மட்டும் சென்சாரில் அனுமதிக்க முடியாது என்றார்கள்.

ரிவைசிங் கமிட்டி சென்றோம், அங்கே நடிகை கௌதமி தான் தலைவராக இருந்தார். படத்தின் மூலம் என்ன சொல்ல போகிறீர்கள் என்றார். லேடீஸ் ஹாஸ்டலில் தவறுகள் நடக்கின்றன. அப்படி நடக்கக் கூடாது என்று நாங்கள் சொல்கிறோம் என்றோம். பல மணி நேரம் காக்க வைத்தார்கள். பிறகு நீங்கள் எதை வெட்ட வேண்டுமோ அதை தாராளமாக வெட்டிக்கொள்ளுங்கள்.

ஆனால் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்விகள் கேளுங்கள் விளக்கம் சொல்கிறோம் என்றேன். அவர்கள் எதையும் கேட்பதற்குத் தயாராக இல்லை. நான்கு பக்கம் அளவில் குறிப்பிட்டு நீக்கச் சொன்னார்கள். நக்மா என்று பெயர் இருக்கக் கூடாது என்றார்கள். லலிதா என்று பெயர் இருக்கக் கூடாது என்றார்கள். அந்தப் பெயர்கள் ஒரு நிறுவனத்தின் பெயர் அல்ல சாதாரணமாக இருக்கக்கூடியது தான்.

ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் அவ்வளவு அவமதித்தார்கள். விளக்கிப் பேசும்போது கையைக் காட்டிப் பேசியதைத் தங்களை அவமதிப்பதாகக் கருதி மன்னிப்பு கேட்டு லெட்டர் கொடுங்கள் என்றார்கள். கதாநாயகன் கதாநாயகியை மேலே பார்க்கிறான். அந்தக் காட்சியைத் தூக்குங்கள் என்றார்கள். நாங்கள் விளக்கம் சொன்னால் எதுவும் பேசக்கூடாது வெளியே போங்கள் என்று சொன்னார்கள்.

எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு அங்கே எங்களை நடத்தினார்கள். சென்சார் விதிகள் எல்லாம் 1952ல் உள்ளது அப்படியே இன்றும் உள்ளன. ஆனால் திரைப்படங்களும், வாழ்க்கை முறையும், கலாச்சாரமும் எவ்வளவோ மாறிவிட்டன. ஆனால் அதை மாற்றாமல் அப்படியே வைத்து இருக்கிறார்கள். 5 ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்சார் விதிகளை மாற்ற வேண்டும். அப்போதுதான் இவர்களுக்கு நாட்டு நடப்பு என்னவென்று புரியும்.

தெருக்கூத்து நாடகங்களில் இல்லாத இரட்டை அர்த்த வசனங்களா?, ஆனால் திரைப்படத்தில் இருந்தால் பெரிது படுத்துகிறார்கள். அதில் இல்லாததையா நாங்கள் கூறுகிறோம்?. இன்று சினிமா வெப் சீரிஸ் எல்லாம் எவ்வளவு மாறி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்" என தெரிவித்தார்.

விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே .ராஜன் பேசும் போது, "கடந்த இரண்டு ஆண்டுகளில் 250 முதல் 300 படங்கள் எடுத்து வெளியிட முடியாமல் உள்ளன. ஏனென்றால் கியூபுக்கு 15 முதல் 20 லட்சம் கட்ட வேண்டும். விளம்பர செலவுகள் 50 லட்சம் ஆகும். இப்படி பல பிரச்சினைகள் உள்ளன. இவர்கள் சொந்த பணத்தில் படம் எடுத்திருக்கிறார்கள். சிறிய தயாரிப்பாளர்கள்தான் சொந்தப் பணத்தில் படம் எடுக்கிறார்கள். இது ஒரு அடல்ட் படம், இது இப்படித்தான் இருக்கும்.

இதை ரசிப்பதற்கு மக்கள் இருக்கிறார்கள். இதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதற்காக ஒரு படம் எடுப்பது தவறில்லை. பல கோடி ரூபாய் வசூல் செய்யும் பெரிய ஹீரோ படத்தில் நடித்த நடிகையை இதைவிட மோசமாக காட்டியுள்ளார்கள். இப்போது பெரிய கதாநாயக நடிகர்களே மோசமாக வசனம் பேசுகிறார்கள். தலை முடியைக் காட்டி வசனம் பேசுகிறார்கள்.

இப்போது வருகிற படங்கள் எல்லாமே பழிவாங்கும் கதைகள். எதற்கெடுத்தாலும் துப்பாக்கி, எதற்கெடுத்தாலும் கத்தி என்று உள்ளது. சமூகத்தில் 18 வயது பையன் கத்தி தூக்கி கொண்டு திரிகிறான். இப்போது இருக்கிற படங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. பெரிய கதாநாயகர்களை பின்பற்றுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இப்படி அதிக வன்முறைகள் வெட்டு குத்து என்று நடிப்பது, சிகரெட் புகைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒரு பெரிய கதாநாயகன் செய்யும்போது அதைப் பின்பற்றி ஒரு கூட்டமும் அதையே செய்யும். அவுட்டோரில் வெளிப்புறங்களில் படம் எடுக்கும் போது நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன் முதலமைச்சரைச் சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுத்தோம். அவுட்டோர் லொகேஷன்களில் டிராபிக் போலீஸ் என்று ஏகப்பட்ட பேர் வந்து லஞ்சம் வாங்குகிறார்கள்.

தினசரி 25 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சத்துக்கே கொடுக்க வேண்டியிருக்கிறது. இதைத் தடுத்து முறைப்படுத்த வேண்டும். தலைமைச் செயலகத்தில் சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வர வேண்டும். அப்படி அமைத்து ஒருமுறை அனுமதி வாங்கிவிட்டால். தமிழ்நாட்டில் எங்கே சென்றாலும் பிரச்சினை இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்கும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். முதலமைச்சரும் பரிசீலிக்கிறோம் என்று கூறியுள்ளார் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தஞ்சை திருநாகேஸ்வரம் ராகு கோயிலில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சாமி தரிசனம்!

ABOUT THE AUTHOR

...view details