சென்னை: எழுத்தாளர் துரை குணா எழுதிய "ஊரார் வரைந்த ஓவியம்" என்ற குறுநாவலை, "அம்பு நாடு ஒன்பது குப்பம்" என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார் இயக்குநர் ராஜாஜி. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (அக்.11) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், அந்தோணி தாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்திற்கு அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார்.
"அம்பு நாடு ஒன்பது குப்பம்" படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற தயாரிபாளர் கே.ராஜன் பேசும் போது, "தமிழகத்தில் 60 சதவீத மக்கள் மிகப் பெரிய வேதனையில் வாழ்ந்து வருகின்றனர். எத்தனையோ தலைவர்கள் போராடியும் அதனை சீர்படுத்த முடியவில்லை. அப்போதைய காலங்களில் சமூகத்திற்காக படம் எடுத்தார்கள்.ஆனால், இப்போது பணத்திற்காக படம் எடுக்கின்றனர். இப்படத்தில் அந்தோணி தாசனின் இசை சிறப்பாக இருக்கிறது" என்று கூறினார்.
தொடர்ந்து, "லியோ" படம் குறித்து பேசிய அவர், "அது கெட்ட வார்த்தை அல்ல கேடுகெட்ட வார்த்தை. கேடுகெட்டவன்தான் அப்படி பேசுவான். சினிமாவில் ஒரு பெரிய ஹீரோ அப்படிப்பட்ட வார்த்தையை பேசும் போது, மக்களிடம் உடனே போய் சேருகிறது. லோகேஷ் கனகராஜ் நல்ல இயக்குநர் ஆனால் இது போன்ற வார்த்தைகளை வைத்தால் வாழ்க்கையில் சறுக்கிவிடுவாய்" என்று பேசினார்.