ஹைதராபாத்:பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையுமான அல்லு அரவிந்த், மெகா பட்ஜெட் படங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அல்லு அரவிந்துக்கு சொந்தமான கீதா ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ், மெகா பட்ஜெட் படங்கள் தயாரிப்பிலிருந்து சிறிய பட்ஜெட் படங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்துவது குறித்து கேட்ட போது, “பணமே திரைப்பட தயாரிப்புகளின் தரத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.
திரைப்படங்களின் பட்ஜெட் அதிகரிக்க நட்சத்திர நடிகர்களே காரணம் என்பதை மறுக்கிறேன். ஹீரோக்கள் படத்தின் மொத்த பட்ஜெட்டிலிருந்து 20 முதல் 25 சதவிகித பணம் மட்டுமே வசூலில் இருந்து லாபமாக பெறுகின்றனர். எனவே, திரை நட்சத்திரங்களின் சம்பளம் மட்டும் படத்தின் பட்ஜெட் அதிகரிக்க காரணம் எனக் கூறுவது தவறானது. நட்சத்திர நடிகர்களின் சம்பளத்தோடு கணிசமான தொகை படத்தின் தயாரிப்புக்காக ஒதுக்கப்படுகிறது.
அதேவேளை மெகா பட்ஜெட் படங்கள் மட்டுமே நட்சத்திர நடிகர்களின் வளர்ச்சிக்குக் காரணமல்ல. உதாரணமாகக் கன்னட நட்சத்திர நடிகர் யாஷ்-யை கூறலாம். ஒரு நடிகர் பிரபலமடைய ஒரு மெகா ஹிட் திரைப்படம் மட்டுமே முக்கிய காரணம் கிடையாது. ஒரு நட்சத்திர நடிகருக்கு மெகா பட்ஜெட் படங்கள் அவரது நட்சத்திர அந்தஸ்தை மேம்படுத்த உதவும். கன்னட நடிகர் யாஷ் கேஜிஎஃப் படத்திற்கு முன்பு அவரது நட்சத்திர அந்தஸ்து என்ன? எனப் பார்த்தால் அவர் கன்னட திரையுலகில் மட்டுமே பிரபலமாக இருந்துள்ளார்.
மேலும், கேஜிஎஃப் படத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பு அவரின் நட்சத்திர அந்தஸ்து உயர முக்கிய காரணமாக இருந்துள்ளது” எனக் கூறினார். அல்லு அரவிந்த் கூறிய கருத்துக்கு யாஷ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். யாஷின் ரசிகர் ஒருவர் அவரது சமூக வலைத்தள பக்கத்தில், “இந்த பணக்கார மனநிலையை விடுத்து யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என கூறியுள்ளார். அதே போல் அல்லு அரவிந்த் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் யாஷ் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், நடிகர் யாஷ் கேஜிஎஃப் படத்திற்கு முன்பாகவே பிரபல நடிகர் தான் எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பொங்கல் ரேஸில் இணைந்த கேப்டன் மில்லர்.. ரிலீஸ் தேதி தள்ளிப்போக காரணம் என்ன?