ஹைதராபாத்:குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (அக்.17) 69வது தேசிய திரைப்பட விருதுகளை வழங்க உள்ளார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியானது, டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற உள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கலந்து கொள்ள உள்ளார். இந்த விழா இன்று மாலை 3 மணிக்கு தொடங்க உள்ளது.
விருதுகள் பட்டியல்: 2021ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருதை வஹீதா ரஹ்மானும், 2021ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமான மாதவன் இயக்கிய ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படமும், 2021இல் சிறந்த நடிகருக்கான விருதை அல்லு அர்ஜூனும், சிறந்த நடிக்கைகான விருதை ஆலியா பட், கீர்த்தி சனோன் ஆகியோர் பெறுகின்றனர்.
காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் மிமி படங்களில் நடித்த பல்லவி ஜோஷி மற்றும் பங்கஜ் திரிபாதி ஆகியோர் சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெறுகின்றனர். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ஆர்ஆர்ஆர் திரைப்படமும், தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை காஷ்மீர் ஃபைல்ஸ் பெறுகிறது.