தமிழ் சினிமா ரசிகர்களுக்கு திரைப்படத்தை காட்டிலும் அந்தப் படத்தின் பாடல்கள்தான் முதலில் பெரிதாக விரும்பப்படும் ஒன்றாகும். படத்தின் கதை சரியில்லாமல் போனாலும் பாடல்களுக்காக பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
இதன் நீட்சியாக மறைந்த பாடகர் எஸ்.பி., பாலசுப்பிரமணியம், மறைந்த பாடகி சொர்ணலதா, இசைஞானி இளையராஜா, பாடகிகள் ஜானகி, சுசீலா என எண்ணிலடங்கா பாடகர்களின் பாடல்களையும் அவர்களது இசையையும் கொண்டாடுகின்றனர்.
தமிழ் பாடல் வரிகளையும், இசையமைப்பாளர்களின் இசையையும் உள்வாங்கி பாடலுக்கு உயிர் கொடுக்கும் பாடகர்கள்தான் இங்கு அதிகம் ரசிக்கப்படுகிறார்கள். இந்த வரிசையில் சில காலமாக தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத பாடல்கள் தந்த பாடகர் பிரதீப்குமாரின் 35ஆவது பிறந்தநாள் இன்று.
பிரதீப் பெரும்பாலும் சந்தோஷ் நாராயணன் மற்றும் சான் ரோல்டன் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். மூச்சைப் பிடித்து பாடி உணர்வை வெளிப்படுத்தும் பாடகர்கள் மத்தியில் பிரதீப்பின் குரல் ஒவ்வொரு உணர்ச்சிகளையும் அதன் பாணியிலேயே ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் இருக்கும்.
காதல் குறித்த மகிழ்ச்சிக்கான பாடல் என்றால் ஜிப்ஸி திரைப்படத்தில் வரக்கூடிய ‘காத்தெல்லாம் பூ மணக்க’ ஒரு சிறந்த உதாரணம் ஆகும். காதல் தோல்விக்கு காலா படத்தில் வரும் ‘கண்ணம்மா கண்ணம்மா’ நம் துவண்டு போன காதலை சற்று தூளியில் போட்டு தாலாட்டும் உணர்வை தந்து விட்டு போகும். துன்பங்களால் நிறைந்து இருக்கும் போது ஜெய்பீம் படத்தின் ‘ தல கோதும் இளங்காத்து’ வந்து நம் தலையை கோதி ஆறுதல் கூறும்.