டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா தமிழ், இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழி படங்களில் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் இவரது நடனத்தை பார்த்து இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று பாராட்டப்படுபவர். நடிப்பை தாண்டி இயக்குநராக தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெற்றி பெற்றவர். விஜய் நடித்த போக்கிரி, ஜெயம் ரவி நடித்த எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பிய பிரபுதேவா தொடர்ந்து தமிழில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் பொய்க்கால் குதிரை, பஹீரா உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாகின.
தற்போது பிரபுதேவா முசாசி என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'முசாசி' ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் 'நடனப்புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார்.
சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.