சென்னை: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான பிரபாஸ் ‘பாகுபலி’ படத்துக்கு பின் இந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார். தமிழிலும் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். பிரபாஸ் நடிப்பில் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள். அதைத் தொடர்ந்து, பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.
தற்போது ‘சாலர்’, ‘ஆதிபுருஷ்’ (Adipurush) உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆதி புருஷ் படம் இந்த ஆண்டில் பார்வையாளர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஓம் ராவத் இயக்கத்தில் தயாரான இந்த பிரம்மாண்டமான படைப்பு இதற்கும் முன் நியூயார்க்கில் நடைபெற்ற ட்ரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேக திரையிடலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படத்தின் புதிய தகவல்களுடன் வெளியிடப்படும் பிரத்யேக போஸ்டர் மற்றும் காணொளிகள், ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்து வருகிறது. இதனை தொடர்ந்து படக்குழு முன்னோட்ட வெளியிட்டிற்கு தயாராகி இருக்கிறது. இப்படத்தின் முன்னோட்டம் இந்தியாவில் மட்டுமல்லாமல் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் உலகளாவிய அளவில் வெளியிடப்படவிருக்கிறது.