சென்னை: பாலிவுட்டில் வெளியான 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
'ஆதிபுருஷ்' படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் இப்படத்தை பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. படத்தைப் பற்றிய அப்டேட்டுக்காக காத்திருந்த அவர்களுக்கு, படக்குழு, இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியாகும் தேதியும், இடமும் அறிவித்து உற்சாகமடைய செய்திருக்கிறது. அக்டோபர் 2-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படவுள்ளது.
மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரபாஸ் மற்றும் படத்தின் நாயகி கீர்த்தி சனோன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.