அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள "நெஞ்சுக்கு நீதி" திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று(மே 9) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், அமைச்சர் அன்பில் மகேஷ், பாடலாசிரியர் யுகபாரதி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆர்ஜே.பாலாஜி, போனி கபூர், ஆர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
’நெருப்புடா’ பாட்டின் மூலம் ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் செய்தவர், அருண்ராஜா காமராஜ் என்று பாடலாசிரியர் யுகபாரதி நகைச்சுவையாகப் பேசினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய ஆர்ஜே பாலாஜி, ‘கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி திமுக பதவியேற்றது. அந்த நாள் ஒரு 28 வயது பையனுக்கு கரோனா காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக படுக்கை தேவைப்பட்டது. 8 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதவியால் அந்தப்பையனுக்கு படுக்கை கிடைத்தது.
ஆர்டிக்கள் 15 திரைப்படம் இந்திய சினிமாவிற்கு தேவையான படம். அதே போல தமிழ்நாட்டிற்கும் தேவையானது. ஜெய் பீம், பரியேறும் பெருமாள் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படங்கள் எல்லாம் வரும்போது இல்லாத சாதியைப் பற்றி திரும்ப பேசுகிறார்கள் என்று சொல்கின்றனர். இல்லாத சாதியைத் திரும்ப கொண்டு வந்து படம் எடுக்கின்றனர் என குற்றச்சாட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இன்னும் 445 கிராமங்களில் தீண்டாமை உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு உள்ளது. கபாலி வந்த போது சில கல்லூரி மாணவர்களிடம் நான் கேட்டேன். அப்போது அந்த ஆள் படத்தை நாங்கள் பார்க்க மாட்டோம் என்றனர். படம் எடுத்தது பா. இரஞ்சித் அதனால் தான். கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு சாதி என்ற உணர்வு உள்ளது. இது போன்ற மனநிலையை மாற்ற நெஞ்சுக்கு நீதி போன்ற திரைப்படங்கள் இன்னும் அதிகமாக வர வேண்டும்’ என்றார்.
பின்னர் சிவகார்த்திகேயன் பேசுகையில், ’சினிமாவில் டான் உதயநிதி தான். டானிற்கு நிறைய விளக்கம் உள்ளது. கேஜிஎஃப் படத்தின் பாணியில் சொல்லணும் என்றால் ”Power full people make power full films” என்று சொல்லலாம். அருண் ராஜாவை நண்பன் என்று சொல்வதில் எனக்குப்பெருமையாக உள்ளது.
எனக்கும் ஒரு நல்ல படம் பண்ண வேண்டும் என்று ஆசையாக உள்ளது. அதனால், எனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும் என இந்த மேடையில் நான் கேட்டுக்கொள்கிறேன். மனைவியின் இழப்பு அருண் ராஜாவுக்கு மிகப்பெரிய இழப்பு தான். ஆனால், சிந்து உன்னுடன் இருப்பார்’ இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசும் போது மேடையிலேயே அருண்ராஜா காமராஜ் கண் கலங்கினார்.