தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'பொன்னியின் செல்வன் 2' முதல் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு! - பொன்னியின் செல்வன் 2 புதிய அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு (Ponniyin Selvan-2) படத்தின் முதல் சிங்கிள் "அகநக" வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் 2: முதல் சிங்கிள் தேதி அறிவிப்பு!
பொன்னியின் செல்வன் 2: முதல் சிங்கிள் தேதி அறிவிப்பு!

By

Published : Mar 18, 2023, 1:16 PM IST

சென்னை: பிரபல இயக்குனர் மணிரத்னம், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை வைத்து இரண்டு பாகங்களைக் கொண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். அதில் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை லைகா நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருந்தது. மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, கிட்டத்தட்ட ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன் வரை எடுக்க நினைத்த பொன்னியின் செல்வன் நாவலை, மணிரத்னம் மிக அற்புதமாக எடுத்து முடித்து விட்டார். நாவல் படித்தவர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் பெரிய குறைகள் இன்றி நன்றாகவே படம் எடுக்கப்பட்டிருந்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் என முன்னணி நடிகர்களின் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. இப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய், குந்தவையாக நடித்த த்ரிஷா, வந்தியத்தேவனாக நடித்த கார்த்தி உள்ளிட்டோரின் நடிப்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. முதல் பாகம் பெற்ற மிகப் பெரிய வெற்றியால் இரண்டாம் பாகம் எப்போது என்ற‌ எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். முதல் பாகத்தில் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தின் பாடல்களுக்கு தற்போது அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இரண்டாம் பாகத்தில் நான்கு பாடல்கள் மற்றும் இரண்டு சிறிய பாடல்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல் பாடலான "அகநக" என்ற பாடல் வருகின்ற 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலை இளங்கோ எழுதியுள்ளார். சக்தி ஸ்ரீ கோபாலன் இப்பாடலை பாடியுள்ளார். வந்தியத்தேவன் மற்றும் குந்தவை இடையிலான காதலை வெளிப்படுத்தும் பாடலாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 29 ஆம் தேதி நடைபெற‌ உள்ளதாகவும் சில தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகமே படத்தின் மொத்த பட்ஜெட்டையும் எடுத்துவிட்டதால், இரண்டாம் பாகம் இன்னும் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாகவே இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு எடுக்கப்பட்டு விட்டது. ஒரு சில காட்சிகள் மட்டுமே சமீபத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: தருமபுரியில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details