சென்னை: பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தின் Anthem வெளியீட்டு விழா, நேற்று(ஏப்.15) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விளையாட்டுத் திடலில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், Anthem பாடலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கார்த்தி, விக்ரம், ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர். இதில், திரைப்படத்தின் சுவாரசியத் தகவல்களையும், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த உற்சாக அனுபவங்களையும் நடிகர், நடிகைகள் பகிர்ந்து கொண்டனர்.
முதலாவதாகப் பேசிய நடிகர் ஜெய்ராம், "பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியீட்டிற்கு முன்பு, 'பசிக்குது மணி' என்ற கதையை நான் சொல்லியது மிகவும் பிரபலமாகியது. தற்போது இன்னொரு கதை மனதிற்கு வருகிறது என்றார். தாய்லாந்தில் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது நடிகர் பிரபு குதிரையில் ஏறுவதற்கு சுஷி பாக்கணும் என்பார். தாய்லாந்து குதிரையை பார்த்தவுடன் இது குதிரை இல்ல; ஒட்டகம் மாதிரி இருக்கு, ஏறவே முடியாது மணி என்று இயக்குநரிடம் தெரிவித்துவிட்டார்.
தாய்லாந்தில் ஷூட்டிங்கிற்கு வந்த 31 குதிரைகளில் ஒரு குதிரை மட்டுமே ஆண் குதிரை. அந்த ஆண் குதிரையில் சென்ற நடிகர் பிரபு 'புடி மணி புடி' என்று கூறியபடி ஒரு காட்டிற்குள் சென்றுவிட்டார். பத்து நிமிஷத்திற்குப் பிறகு வந்த நடிகர் பிரபுவிடம் உள்ளே என்ன நடந்தது என கேட்டுப்பார்த்து விட்டேன். இதுவரை அவர் சொல்லவில்லை. பத்து நிமிடம் குதிரைக்கும் நடிகர் பிரபுவுக்கு இடையில் நடந்தது அவருக்கு மட்டுமே தெரியும்.
எனக்கு 'ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா' என்ற பாடலைத் தந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி" என்று கூறினார்.