சென்னை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டு ஜன.12ஆம் தேதி தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய் ஆகிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், அருண் விஜய் நடித்த மிஷன் போன்ற படங்கள் பொங்கல் விருந்தாக வெளியாகியுள்ளது. தற்போது இப்படங்கள் இந்த ஆண்டின் முதல் வசூல் வேட்டையைத் தொடங்கி வைக்கும் படங்களாக இருக்கும் என்றும், கோலிவுட்டில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
கேப்டன் மில்லர்:ராக்கி, சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடித்து வெளியாகியுள்ள படம் கேப்டன் மில்லர். ஆங்கிலேயர் காலத்தில் நடக்கும் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனாலும், வசூலில் குறையில்லாமல் உள்ளது. தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் இருவரும் இணைந்து இப்படத்தை காப்பாற்றியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இப்படம் முதல் நாளில் ரூ.8.60 கோடியும், இரண்டாவது நாளில் சற்று குறைந்து ரூ.6.75 கோடி என இரண்டு நாட்களில் உலகளவில் மொத்தம் ரூ.15.45 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.