சென்னை:நடிகர் சூர்யா நடித்த சில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் இயக்கத்தில், நடிகர் சிம்பு 'பத்து தல' என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்பு, கௌதம் கார்த்திக், கலையரசன் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படதிற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'மஃப்டி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் வரும் மார்ச் 30ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இந்தப் படத்தின் புரொமோ பாடல் ஒன்று சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது மகன் ஏ.ஆர்.அமீன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் பேசியுள்ளனர்.
அதில் சிம்புவை படத்தின் புரொமோஷனுக்கு அழைத்தபோது அவர் வர மறுத்துவிட்டதாகப் பேசியுள்ளனர். மேலும் விஜய் நடித்த வாரிசு படத்தில் ஒரு பாடல் புரொமோஷனுக்கு போக முடிந்த அவரால் அவர் நடித்த படத்தின் புரொமோஷனுக்குப் போக முடியாதா? என்றும் விமர்சித்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில், 'அனைவருக்கும் வணக்கம். ஒரு விஷயத்தை தெளிவாக விளக்க விரும்புகிறேன். 'பத்து தல' படம் தொடர்பாக எங்களது திட்டப்படி புரொமோஷன் வீடியோவில் சிம்புவை கொண்டுவரும் திட்டம் இல்லை. அவருடைய பெயரை தவறாகப் பயன்படுத்த வேண்டாம். 'பத்து தல' படத்தின் புரொமோஷன் குறித்து தயாரிப்பாளர்களுக்கு தெளிவான யோசனை உள்ளது. நாங்கள் வெறுப்பு பேச்சை வெறுக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தயவுசெய்து சிம்பு பெயரை களங்கப்படுத்தாதீர்கள் -"பத்து தல" இயக்குனர் கிருஷ்ணா கோரிக்கை! ஏற்கனவே சிம்புவினைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் சுழன்று வந்த நிலையில் தற்போது தான் சற்று திருந்தி சரியாக சிம்பு படப்பிடிப்புக்கு சென்று நடித்து வருகிறார். தற்போது மீண்டும் அவர் மீது தேவையில்லாத குற்றச்சாட்டு சுமத்த வேண்டாம் என்று அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஏய் புள்ள முத்தழகு..! 16 வயதை தொட்ட 'பருத்திவீரன்'