சென்னை:இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா, சங்கீதா, லைலா ஆகியோரின் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிதாமகன். ” ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி “ சிறுகதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் விக்ரம் மற்றும் சூர்யா இருவரது நடிப்பும் பேசப்பட்டது. மேலும் விக்ரம், சூர்யா ஆகியோரின் திரையுலக வரலாற்றில் இப்படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. நடிகர் விக்ரமுக்கு இப்படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இப்படத்தை வி.ஏ.துரை தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை சர்க்கரை வியாதி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வி.ஏ.துரை பிதாமகன் மட்டுமின்றி கஜேந்திரா போன்ற பல படங்களை தயாரித்தவர். EVERGREEN MOVIES என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி என்னம்மா கண்ணு, லூட்டி, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக சர்க்கரை வியாதி காரணமாக தயாரிப்பாளர் துரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற கூட காசு இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக அந்த வீடியோவில் கூறப்பட்டு உள்ளது. சர்க்கரை வியாதி காரணமாக அவரது காலில் உள்ள எலும்பு வெளியே தெரியும் அளவுக்கு கடுமையாக அவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் மிகவும் மெலிந்து இருப்பதாகவும் அவருக்கு உதவி தேவை எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது நடிகர் கருணாஸ் ரூ.50 ஆயிரம் பண உதவி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிதாமகன் படத்தில் நடிக்க நடிகர் கருணாஸ் -க்கு தயாரிப்பாளர் துரை ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். தற்போது அந்த தொகையை துரையின் மருத்துவ செலவுக்கு கொடுக்கிறேன் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார். தயாரிப்பாளர் துரையின் நிலை அறிந்து நடிகர் சூர்யாவும் ரூ.2 லட்சம் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.