தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"அண்ணன் விஜயகாந்த் நலம் பெற பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களின் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்" - நடிகர் சூர்யா - விஜயகாந்த் உடல்நிலை

Actor Vijayakanth Health Issue: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் பூரண குணமடைய பிரார்த்தனை செய்யும் இதயங்களுடன் தானும் ஒருவனாக பங்கேற்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

people prayer will help to vijayakanth recover completely said actor Suriya
விஜயகாந்த் உடல்நிலை குறித்து நடிகர் சூர்யா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 8:50 AM IST

Updated : Dec 4, 2023, 10:09 AM IST

சென்னை: தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே தனது உடல்நலத்தில் பல பிரச்சனைகளைச் சந்தித்துவந்தார். அதன் காரணமாக பொது நிகழ்ச்சிகள், கட்சிப் பொதுக் கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், நவம்பர் 18ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காகச் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நவம்பர் 23ஆம் தேதி அன்று மருத்துவமனை நிர்வாகம், காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பதாகவும் அறிக்கை வெளியிட்டது.

பின்னர், சிறிது நேரம் கழித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் விஜயகாந்த்தின் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை நிர்வாகத்தின் அறிக்கை குறித்து பிரேமலதா வெளியிட்ட வீடியோவில், விரைவில் விஜயகாந்த் நலம் பெறுவார் என்று தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

இதனிடையே, விஜயகாந்த் உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரவி நிலையில், மருத்துவமனையில் விஜயகாந்த் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், விஜயகாந்த் விரைவில் குணமடைந்து உங்களைச் சந்திப்பார் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், ஃபெப்சி (FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்கத் தலைவர் நாசர், தயாரிப்பாளர் சிவா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனர். மேலும், விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் எனப் பலர் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம், தொலைப்பேசி வாயிலாக நடிகர் சூர்யா கேட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்திலும் நடிகர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், "அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன். கோடான கோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும். அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்" என்று பதிவிட்டுள்ளார். நடிகர்‌ சூர்யா நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான 'பெரியண்ணா' படத்தில், நடிகர் விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விஜயகாந்த் விரைவில் குணமடைய பால்குடம் எடுத்து தேமுதிகவினர் பிரார்த்தனை..!

Last Updated : Dec 4, 2023, 10:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details