சென்னை: திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் மூலம் ஆவணப்படங்களைத் தயாரித்தல், நாடகங்களை அரங்கேற்றுதல் என சினிமாவைத் தாண்டிய பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். மேலும் நீலம் பண்பாட்டு மையம், கூகை திரைப்பட இயக்கம், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ், நீலம் மாத இதழ், நீலம் பதிப்பகம், நீலம் யூடியூப், நீலம் புக்ஸ், நீலம் புரொடக்ஷன்ஸ் என மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் தனது செயல்பாடுகளை முன்னகர்த்தி வருகிறார்.
அந்த வகையில், 'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' இசைக்குழு இதுவரை இசையின் மூலமாகவும், பாடலின் மூலமாகவும், உள்நாட்டு அரசியல் பற்றிய பாடல்கள், சமூகப்பிரச்னை பற்றிய பாடல்களை அரங்கேற்றியுள்ளது. அதற்கான அங்கீகாரமாக, பொதுமக்களின் பாராட்டுக்களையும் மற்றும் பல்வேறு விருதுகளையும் குவித்து வந்தது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாகக் கொண்டாடும் விதமாக மறுக்கப்பட்ட கலைகளை, மேடை ஏற்றி கௌரவிக்கும் நிகழ்ச்சியாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் 'மார்கழியில் மக்களிசை 2020' எனும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
அதன் நீட்சியாக தற்போது 2023ஆம் ஆண்டின் 'மார்கழியில் மக்களிசை 2023' நிகழ்ச்சி கேஜிஎப், ஓசூர், சென்னை என்று மூன்று இடங்களில் நடைபெற்றது. அதில் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் சென்னை, மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பள்ளியில் இந்நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி நடிகர் விஜயகாந்த்தின் மறைவையொட்டி அன்று நடக்கவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி விஜயகாந்த்தின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.