தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பா.ரஞ்சித் - கலையுலகில் ஒரு கலகக்குரல்! - attakathi

இயக்குனர் பா.ரஞ்சித் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

பா.ரஞ்சித் - ஒடுக்கபபட்ட மக்களுக்காக ஒலிக்கும் குரல்
பா.ரஞ்சித் - ஒடுக்கபபட்ட மக்களுக்காக ஒலிக்கும் குரல்

By

Published : Dec 8, 2022, 1:04 PM IST

திரைத்துறை மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் இயக்குனர்கள் வெகுசிலரே. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவெடுத்துள்ளார் பா.ரஞ்சித். 2012இல் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

இளைஞர்களை கவரும் கமர்ஷியல் படங்களுக்கு பெயர் போன வெங்கட் பிரபு பாசறையில் இருந்து எளிய மக்களின் அரசியல் பேசும் இயக்குனராக பா.ரஞ்சித் சற்று ஆச்சரியமான ஒன்றுதான்.

அனைவராலும் அறியப்படாத நகரின் வெளிப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை எடுத்துக்காட்டிய திரைப்படம்தான் அட்டக்கத்தி. நடிகர் தினேஷின் வெகுளியான நடிப்பு மூலம் காதல் மீது இதுவரை புகுத்தப்பட்டிருந்த புனிதத்தன்மையை சுக்கு நூறாக உடைத்து எறிந்தது.

இதுவரை தமிழ் சினிமாவில் ரவுடிகளாகவும், படிப்பறிவு இல்லாதவர்களாகவும் காண்பிக்கப்பட்ட வடசென்னை மக்களின் வாழ்வியலை இவ்வளவு தெளிவாக யாராலும் விவரித்து இருக்க முடியாது. ஆனால் அது பா.ரஞ்சித்திற்கு எளிதானதாக இருந்தது. படத்தின் அனைத்து காட்சிகளிலும் வலுக்கட்டாயமாக எதையும் திணிக்காமல் இயல்பாகவே நகர்ந்திருந்தது.

வடசென்னை மக்களின் வாழ்வியல், அவர்கள் கல்வியின் முக்கியத்துவம், விளையாட்டு, அரசியல் என சுவரை களமாக கொண்டு பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் இயல்பான சினிமாவாக இருந்தது. குறிப்பாக வடசென்னை மக்கள் முரட்டுத்தனமான இயல்புடையவர்கள் என்ற பிம்பத்தை மெட்ராஸ் படத்தில் உள்ள அன்பு, காளி, ஜானி உள்ளிட்ட கேரக்டர்கள் மூலம் உடைத்திருப்பார் பா.ரஞ்சித்.

மெட்ராஸ் படத்திற்கு பிறகு அமைந்த ரஜினிகாந்த் பா.ரஞ்சித் கூட்டணி ரசிகர்கள் சற்றும் எதிர்ப்பார்க்காத ஒன்றுதான். 2016 ஆகஸ்ட் மாதம் வெளியான கபாலி பர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல், படம் வெளியாகும் முன்பு வெளியான டீசரை வைத்து வரை பா.ரஞ்சித் இயக்கிய ரஜினியின் கமர்ஷியல் படம் என நினைத்தனர்.

கபாலி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவை வைத்து படம் இயக்குகிறோம் என்பதற்காக பா.ரஞ்சித் தனது கதையில் சமரசம் செய்து கொள்ளவில்லை. மலேசியாவில் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக தமிழர்களின் அவலநிலை குறித்த கதைக்களமாக அமைத்திருப்பார்.

குறிப்பாக பெரிய ஹீரோக்கள் படம் என்றாலே நாயகனை மையமாக வைத்தே திரைக்கதை அமைந்திருக்கும். ஆனால் கபாலி படத்தில் அந்த வழக்கத்தை உடைத்து பெண் கதாபாத்திரங்களே கதையின் மையமாக அமைந்திருக்கும். கபாலி திரைப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா ஆகியோரது கதாபாத்திரங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும்.

கபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து இயக்கிய காலா படத்தில் மும்பை தாராவியில் வாழும் மக்களின் நில உரிமை மீட்பு பற்றி பேசும் படம். இப்படத்தில் ரஜினி தனது மனைவி உடனான உரையாடல், தனது முன்னாள் காதலியை சந்திக்கும் காட்சி, நானா படேக்கரை சந்திக்கும் காட்சி என பல்வேறு காட்சிகளில் விண்டேஜ் ரஜினியை வெளிக்கொண்டு வந்த பா.ரஞ்சித்தை பாராட்டியே ஆக வேண்டும்.

சார்பட்டா பரம்பரை படத்தில் சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை என இரு வேறு சண்டை குழுக்களை மையமாக கொண்டு 1970,80களின் அரசியல் செயல்பாடு குறித்து பேசியிருப்பார் பா.ரஞ்சித்.

”தோத்துப் போ, பரம்பரையில ஏன் மானத்த கொண்டு வறீங்க”, ”உடன்பிறப்புகள் யாரும் பயப்பட மாட்டார்கள்” என்ற எமர்ஜென்சி காலத்து வசனம் என பல வசனங்கள் அழுத்தமாக அமைந்திருக்கும். மேலும் கபிலன், ரங்கன் வாத்தியார், டான்சிங் ரோஸ், பீடி தாத்தா உள்ளிட்டோரின் கேரக்டர் வடிவமைப்பு பா.ரஞ்சித்தின் திரைக்கதை அமைப்புக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

பா.ரஞ்சித் படங்கள் பற்றி பேசுகையில், அவரது படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் பற்றி விவாதிக்காமல் கடந்து செல்ல முடியாது. அவரது படங்களில் வரும் குமுதவல்லி, செல்வி, சரீனா, மாரியம்மாள் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் ஆண் கதாபாத்திரங்களுக்கு நிகராக கதையில் முக்கிய பங்கு வகிக்கும். பெண் கதாபாத்திரங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற புளித்துபோன தமிழ் சினிமா டெம்ப்ளேட்களை ரஞ்சித் தனது படங்களில் உடைத்தார்.

பெண் கதாபாத்திரங்களை சந்தோஷம், சிரிப்பு, கோபம், காதல், உள்ளிட்ட உணர்ச்சிகளை எந்தவித வரையறையின்றி வெளிக்காட்டும் விதமாக காட்சிபடுத்தியிருப்பார். இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதையும் படிங்க: IMDb 2022ஆம் ஆண்டிற்கான 'மிகவும் பிரபலமான இந்திய நடிகராக' தனுஷ் தேர்வு!

ABOUT THE AUTHOR

...view details