பிரபல 90’ஸ் தொடர்களான ஜீ பூம்பா, மர்ம தேசம், விடாது கறுப்பு உள்ளிட்ட தொடர்களிலும், கண்ணுபட போகுதையா உள்ளிட்ட திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தவர், லோகேஷ் ராஜேந்திரன். சுமார் 150-க்கும் மேற்பட்ட தொடர்களிலும், 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்திய அளவில் பிரபலமாகி தெலுங்கில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். பின்னர் பட வாய்ப்புகள் இல்லாததால் லோகேஷ் எடிட்டிங், லைட் மேன் உள்ளிட்டப் பணிகளை செய்து கொண்டும் குறும்படத்தையும் இயக்கி வந்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு அனிஷா என்பவரை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட லோகேஷ், பின்னர் தாம்பரம் மாடம்பாக்கத்தில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனைவி அனிஷாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லோகேஷ் பிரிந்து நண்பர்களுடன் தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
மன உளைச்சலில் இருந்த லோகேஷ் மதுபோதைக்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மயக்க நிலையில் லோகேஷ் படுத்துக்கிடந்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சி.எம்.பி.டி.போலீசார் லோகேஷின் உடலைக் கைப்பற்றி சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் லோகேஷ் நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனைவியைப் பிரிந்த லோகேஷ் மன உளைச்சலில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.