சென்னை:நடிகர் தனுஷ் நடிப்பு மட்டுமின்றி பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர். தற்போது தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், அஜித், சூர்யாவுக்கு அடுத்தபடியாக பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர். அதுமட்டுமின்றி இயக்குநராகவும் தனது திறமையை நிரூபித்தவர். இவர் இயக்கிய ''பவர் பாண்டி'' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. படத்தின் நாயகனாக ராஜ்கிரண் மற்றும் ஜோடியாக ரேவதி ஆகியோர் நடித்தனர். இதில் இயக்குநராக அவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியானார்.
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் தனுஷ் படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இது தனுஷ் நடிக்கும் 50வது படம் என்பது கூடுதல் சிறப்பு. முன்னதாக ''தனுஷ் 50'' என்ற போஸ்டர் சன் பிக்சர்ஸ் சார்பாக வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர்,நடிகையர் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் எஸ்ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.