ஹைதராபாத்:தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஆகிய படங்களை இயக்கிய அட்லி ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ஜவான். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த செப்., 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
ஜவான் படத்தில் நயன்தாராவுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பிரபல ஐஎம்டிபி இணையதளத்தில் இந்திய பிரபலங்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். ஐஎம்டிபி (Imdb) இந்த வாரம் வெளியிட்ட வரிசையின் படி நடிகர் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். கடந்த வாரம் ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்ட பிரபலங்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த நயன்தாரா இந்த வாரம் முதலிடம் பிடித்துள்ளார்.
ஜவான் பட வெற்றிக்கு பிறகு ஐஎம்டிபி (Imdb) இந்திய பிரபலங்கள் வரிசையில் மூன்று பேர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது நயன்தாரா முதலிடத்தில் உள்ள நிலையில், இரண்டாவது இடத்தில் ஷாருக்கானும், மூன்றாவது இடத்தில் ஜவான் படத்தை இயக்கிய அட்லி இடம் பிடித்துள்ளார்.