தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிரதீப் ரங்கநாதன் படத்தில் நயன்தாரா? - Tamil Cinema

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதீப் ரங்கநாதன் படத்தில் நயன்தாரா?
பிரதீப் ரங்கநாதன் படத்தில் நயன்தாரா?

By

Published : Mar 21, 2023, 6:02 PM IST

சென்னை:ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர், பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் 100 நாட்கள் ஓடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து கடந்த ஆண்டு, ‘லவ் டுடே’ என்னும் படத்தை இயக்கியது மட்டுமல்லாமல், அதில் தானே கதாநாயகனாக நடித்தார், பிரதீப். இவரது நடிப்பும், லவ் டுடே படத்தின் திரைக்கதையும் ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படமும் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி ஒரு வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமாரின் 62வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படத்தை தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து இந்த ‘AK 62’ என்ற திரைப்படத்தில் அஜித் குமார் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில கருத்து வேறுபாடுகளால் அஜித் குமார் இந்தப் படத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. இதனால் அஜித் குமாரின் அடுத்தப் படத்தை இயக்கப்போவது யார் என்றும், விக்னேஷ் சிவன் அடுத்ததாக யாரை வைத்து இயக்க உள்ளார் என்றும், பிரதீப் ரங்கநாதனின் அடுத்த மூவ் என்ன என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறத் தொடங்கின.

இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து படம் இயக்க உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், இந்த விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் - அனிருத் கூட்டணியில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், நயன்தாரா கதாநாயகியாக இல்லாமல், முக்கிய கதாபாத்திரத்தில் கேமியோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், முன்னதாக சிவகார்த்திகேயனை நடிக்க முயற்சி மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அது மட்டுமல்லாமல், இந்த படத்துக்கு LIC (Love Insurance Corporation) என்ற பெயரும் வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நயன்தாரா தற்போது, பாலிவுட்டில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க:கிளாமருக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை... மாளவிகா மோகனன் ஹாட் கிளிக்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details