சென்னை:நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, நடிகை த்ரிஷாவை பாலியல் வன்கொடுமை செய்வதுபோன்ற காட்சிகள் கிடைக்கவில்லை எனவும், அதில் தனக்கு வருத்தம் இருப்பதாகவும் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். அது மட்டும் இன்றி, இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற லியோ சக்சஸ் மீட்டிலேயே கூற வேண்டும் என நினைத்தேன் எனவும், ஆனால் அதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் அப்போது பேசவில்லை எனவும் கூறியிருந்தார்.
அது மட்டும் இன்றி, தான் வில்லனாக நடித்த பல படங்களில் நடிகைகளை அலேக்காக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகள் இடம் பெறும் நிலையில் தற்போது வில்லன்களுக்கு ஹீரோயின்களுடன் நெருக்கமான காட்சிகள் கிடைப்பதில்லை எனவும் பேசி இருந்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மன்சூர் அலி கானின் இந்த பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பொதுவாக எந்த விஷயங்களுக்கும் ரியாக்ட் ஆகாத த்ரிஷா இந்த விஷயத்தில் கொந்தளித்துப்போய் இருக்கிறார் என்றே சொல்லலாம்.
அந்த வகையில், மன்சூர் அலி கானின், அத்தகைய பேச்சைக் கொச்சையாகக் கருதி தனது கருத்தைத் தெரிவித்த த்ரிஷா, இதுபோன்ற மனிதர்கள் மனிதக் குலத்திற்கே அவமானம் எனவும், அவருடன் தனது ஸ்கிரீனை பகிர்ந்துகொள்ளவில்லை என்பதில் நிம்மதி கொள்கிறேன் எனவும் அவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தனது திரையுலக வாழ்க்கையில் ஒருபோதும் இதுபோன்ற ஒரு மனிதருடன் நடிக்க மாட்டேன் என்பதையும் த்ரிஷா குறிப்பிட்டிருந்தார். அவரை, தொடர்ந்து, மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை குஷ்பு உள்ளிட்ட இன்னும் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மன்சூர் அலி கான், "அனுமார் சிரஞ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி, த்ரிஷாவ காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்திலேயே திருப்பிக் கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்லன்னு ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணிப் போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு அஞ்சறவனா? த்ரிஷாக்கிட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க". எனக் கூறியுள்ளார்.
இவரின் இந்த சர்ச்சை கருத்து மற்றும் அதற்கான விளக்கம் அத்தனையும் கடந்து இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தென் இந்தியத் திரைப்பட சங்கம், சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாகப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம் எனவும், எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் மன்சூர் அலி கான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து தற்போது தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து, பெண்களைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசிய மன்சூர் அலி கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான தகவல் தேசிய மகளிர் ஆணையத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதை நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் ரீபோஸ்ட் செய்துள்ளார்.
இதையும் படிங்க:போய் பொழப்ப பாருங்க.. த்ரிஷாட்ட தப்பான வீடியோவை காமிச்சிருக்காங்க - த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் பதில்!