ஹைதராபாத்:ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "ஆர்ஆர்ஆர்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. வசூலில் சாதனை செய்த ஆர்ஆர்ஆர், பல சர்வதேச விருதுகளையும் குவித்து வருகிறது.
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது. இப்பாடலில் ராம்சரண், ஜூனியர் என்டிஆரின் அதிர வைக்கும் நடனத்துடன், கீரவாணி இசையும் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. அதேபோல், ஹாலிவுட் விமர்சகர்கள் சங்க விருது விழாவில், ஆர்ஆர்ஆர் படத்துக்கு நான்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த சர்வதேச படம், சிறந்த ஆக்சன் படம், சிறந்த பாடல், சிறந்த சண்டை ஆகிய பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன.