சென்னை:நடிகர் விஜய் படம் வெளியாகிறது என்றாலே அந்த நாள் தீபாவளி தான். அதுவே அவரது படத்தின் அப்டேட் வருகிறது என்றால் சொல்லவே வேண்டாம். அதுவும் அவரது பிறந்தநாளுக்கு வந்தால். தளபதி விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் கொண்டாடுகிறாரோ இல்லையோ தமிழ்நாடு தற்போது கொண்டாடி வருகிறது. இப்படி வெறித்தனமான ரசிகர்கள் இருக்கும் வரை விஜய்க்கு எப்போதும் ஜெயமே என்கின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. மாஸ்டர் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் மிகப் பெரிய ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல் அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இன்று விஜய் பிறந்தநாளை ஒட்டி அதிகாலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை விஜய்யே தனது சொந்த குரலில் பாடியுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு இப்பாடலை எழுதியுள்ளார். இப்படத்தில் வரும் ராப் போர்ஷனை அசல் கோளாறு எழுதி பாடியுள்ளார். தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஏற்கனவே இதன் புரோமா வெளியாகி அதில் வந்த நா வரவா அண்ணன் தனியா வரவா என்ற வரிகள் வைரல் ஆனது.
விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் இதுபோன்ற வரிகள் பேசுபொருளாகியுள்ளது. தற்போது பாடல் வெளியாகி உள்ளது. பாடலில் 2000க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் உடன் விஜய் ஆடியுள்ளார். மேலும் இப்பாடலில் மன்சூர் அலிகான் வருகிறார். இதன் மூலம் விஜய் அணியை சேர்ந்தவராக இவர் இருக்க வாய்ப்பு உள்ளது. சஞ்சய் தத்தும் இருப்பது போல காட்டியுள்ளனர். பாடல் வரிகள் விஜய்யின் திரை வாழ்க்கையை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளன.
குறிப்பாக கத்தி மேல பல கத்தி என்ன குத்த காத்திருக்கு அதுதான் கணக்கு.. இந்த கத்தி வேற மாரி.. வேணா ஸ்கெட்ச் எனக்கு.. புரிதா உனக்கு.. மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளில வருவான் பார்.. ஊருக்குள் எனக்கோர்.. பேர் இருக்கு கேட்டாலே.. அதிரும் பார் உனக்கு.. போஸ்டர் அடி அண்ணன் ரெடி.. கொண்டாடி கொளுத்துணும்டி என பாடல் வரிகள் எல்லாம் பட்டாசாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்போது இருந்தே லியோ படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.